வரம்பு மீறும் ஜமாத்துகள் கணவர்கள்

      மார்க்க வரம்புகளை மீறும்
ஜமாத் நிர்வாகிகள் கணவர்கள்
              *************************
                கட்டுரை எண் 1572
                    *****************

வாழ்வில் உடன்படாத தம்பதியர்களை  பல முறை குடும்பத்தார்களே சமரசம் பேசி இணைத்து வைத்த பிறகும் 
மனம் வெறுத்து  தலாக்
அல்லது குலா தலாக்கை இருவரில் ஒருவர்  முறையிடும் பொழுது
அதை ஏற்று அவர்களின் மனஉளைச்சலுக்கு மார்க்கப்படி தீர்வுக்கு வழிவகை செய்து 
தரவேண்டிய ஜமாத் நிர்வாகிகளே 
நாட்களை இழுத்தடிப்பது கடுமையான குற்றமாகும்

இஸ்லாத்தில் திருமணம்  என்பது
இரு குடும்பத்தார் முன்னிலையில் 
ஆண் பெண் இருவரும் செய்து கொள்ளும்  ஒப்பந்தமாகும்
ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றும் வரையே அவர்களிடையே திருமண  பந்தம் தொடரும்
ஒப்பந்தத்தை ஒருவர் மீறும் பட்சத்திலும்
திருமண ஒப்பந்தம்  முறிவை நோக்கி பயணிக்கிறது

இது மேடை பேச்சாக இருக்கிறதே தவிர நடைமுறையில் சாத்தியமற்றதாகவே ஜமாத்தார்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்

இதனால் தம்பதியர்களுக்கு மத்தியில் ஏற்படும் தவறான முடிவுகள் 
கள்ள  உறவுகளுக்கு ஜமாத் நிர்வாகிகளே
மூல காரணம் என்பதை தெளிவாக
உணர வேண்டும்

அதிகாரம் என்பது மார்க்க சட்டத்தை நிலைநிறுத்த பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர
மார்க்கச்சட்டத்தை கடினமாக சித்தரித்து
தனது அதிகாரப்போக்கை நிலைநாட்டுவதற்கு அல்ல

         ***************************
          குர்ஆன் போதனை

அவர்களை ( மனைவியை )
நல்ல முறையில் வைத்துக் கொள்ளுங்கள்
அல்லது நல்ல முறையில் பிரிந்து விடுங்கள்

(ஸூரா அல்-பகரா 2:229)

துன்பப்படுத்தும் நோக்கில் ( குலாவை விரும்பும் மனைவியை ) தக்க வைத்திருக்க வேண்டாம்

ஸூரா அல்-பகரா (2:231)

      ***************************
எடுத்துக்காட்டப்பட்ட இரண்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாகவே சில கணவர்களின் நடை முறை சமூகத்தில்  உள்ளது

இதனால் அவர்களே
தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கும்
மன உளைச்சல்களுக்கும் அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை  உணருவதில்லை

என்னை மதிக்காத ஒரு பெண்ணை
என்னுடன் வாழ விரும்பாத
ஒரு பெண்ணை
சமூகத்தில் மனைவியாக பெயரளவுக்கு 
தக்க வைத்துக்கொள்வதில்
என்ன நன்மை என்பதை
கணவன் சற்று யோசித்தாலே போதுமானது

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல
மாறாக உடன்படிக்கையை சரியாக நிலைநாட்டப்படுவதில் மட்டுமே தொடர்கிறது

உடன்படிக்கையை மீறும் கணவனை
அவனது   மனைவி விட்டு நீங்குவதே அறிவார்த்தம்

உடன்படிக்கையை மீறும் மனைவியை
அவனது கணவன் விட்டு நீங்குவதே அறிவார்த்தம் 

இதில் எவருடைய ஈகோவும் எவருடைய  கண்ணியத்தையும் நிலை நாட்டாது

பல அறிஞர்கள் இந்நிலையை வன்மமாக  கண்டித்துள்ளனர்

இமாம் குர்துபீ  (ரஹ்)
📚 Tafsīr al-Qurṭubī (3/158)
(2:231 விளக்கம்)
فيه دليل على أن من قصد الإضرار بالمرأة في إمساكها أنه عاصٍ لله

மனைவியை துன்புறுத்தும் நோக்கில்
பிடித்து வைத்திருப்பவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாதவன்

இமாம் இப்னு குதாமா ( ரஹ் )
📚 Al-Mughnī (7/323)
فإن عضلها لتفتدي منه فهو ظالم

மனைவி  குலா கேட்கும்போது
தடுத்து அவளிடமிருந்து
ஏதாவது பெற முயன்றால்
அவன் அநியாயக்காரன்

சட்டங்கள் இவ்வாறு இருக்க மனைவியின் குலாவுக்கு கணவன் அனுமதி கொடுத்தால்
குலா செய்து வைக்கிறோம் என்று ஜமாத்துகள் கூறுவதும் அநீதம்

உடன்படாத தம்பதியர்களை ஊருக்காக குடும்பத்தின் கவுரவத்திற்காக பெயரளவில் இணைத்து வைப்பதும் பெற்றோர்கள் செய்யும் அநீதம்

மார்க்க அறிவுரைகளால் உலக நடைமுறைகளால் திருந்தாதவர்கள்
வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை சந்திப்பதின் மூலமாகவே திருந்துவார்கள் என்பது
விதி என்றிருந்தால் அதை எவரும் மாற்றி அமைக்க இயலாது


     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
              7-5-2026

Comments

Popular posts from this blog

ஆலிம்களின் சமூக நிலை

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்