நபிகளாரை நேசிப்போம்

       நபிகளாரை பின்பற்றுவதின்
                        அவசியம்
               ***********************
                 கட்டுரை எண்  1517
                       ************
     
இறைவனின் சொல்லுக்கும் இறைத்தூதரின் சொல்லுக்கும் 
ஒரு முஸ்லிம் எந்தளவுக்கு கட்டுப்பட வேண்டுமோ அந்தளவு  வேறு எவரது சுயசொல்லுக்கும் முக்கியத்துவம்  தர வேண்டிய அவசியம் இல்லை 

அச்சொல் ஈர்ப்புடையதாக இருப்பினும் சரி 
உலகில் யாரும் சொல்லாத கருத்தாக இருப்பினும் சரியே  

அதிகபட்சமாக மேற்கோள் காட்டுவதற்கும் ரசிப்பதற்கும் அவைகளை எடுத்துக்கொள்ளலாமே தவிர மறுமை நன்மையை எதிர் பார்த்து நம்பவோ அவைகளை பரப்பவோ கூடாது 


இந்த சாரத்தை அநேகமான முஸ்லிம்கள் 
புரிந்து கொள்ளவில்லை


அறிஞர்களின் பெயரால் இமாம்களின் பெயரால் முஹத்திசீன்கள் பெயரால் சமூகவலைத்தளத்தில் தற்போது அதிகமாக அது போன்ற கருத்துக்களே மார்க்கம் என்ற அளவுக்கு  பகிரப்படுகிறது 



குர்ஆன் சுன்னா சிந்தனையுடன் அவைகளை கண்டிக்கும் பொழுது கண்டிப்பவர்களை வழிகேடர்களை போல் சித்தரித்து மக்கள் மன்றத்தில் அவர்களை தனித்து விடவும் அழைப்பு பணியில் இருந்து கழட்டி விடவும்  சிலரால் தந்திரமாக சூழ்ச்சி  செய்யப்படுகிறது 



குறிப்பாக ஒரு சில மார்க்க அறிஞர்களே 
அதில் முன்னனி வகிப்பது அவர்களின் தீய குணத்தை வெளிப்படுத்துகிறது 

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்று ஒரு கருத்தை   எடுத்துக்காட்டும் பொழுது 
இக்கருத்தை இதற்கு முன் வேறு இமாம்கள் யாராவது சொல்லியுள்ளார்களா என்று எதிர் கேள்வி கேட்கும் அளவு நூதன வழிகேடு நன்மை எனும் பெயரால் இமாம்களை மதிக்கிறோம் எனும் பெயரால் மீண்டும் ஊடுருவி வருகிறது 


பல மத்ஹபுகள் உருவானதற்கு 
மூல காரணமே இது போன்ற வெற்று வாதங்கள் என்பதை அறிந்தவர்களே அதை புதிய பரிமாணத்தில் அறிமுகம் செய்வது கண்டிக்கத்தக்கது  


நேர்வழி இது தான் என்று தெளிவாக அறிந்து சத்தியத்தை ஏற்று வந்த பின் மீண்டும் பழைய வழிகேடுக்கு திரும்பி சென்று விடக்கூடாது என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு அடிப்படையானது

அறிஞர்களை மதிக்குதல் போற்றுதல் என்பது வேறு அவர்களின் கூற்றை நபிமொழி போல் அங்கீகரிக்க வேண்டும் என்பது வேறு 

தனிமனித வழிபாடு கூடாது என்று பிறருக்கு உபதேசித்தால் மட்டும் போதாது அந்த வழிபாடு எவ்வகையிலும் நம்மில் நுழைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்



நபிகள் நாயகம்  (ஸல் ) அவர்கள் மரணித்ததற்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் பெருந்தகை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் அணுகுமுறை எந்தளவு குர்ஆன் சுன்னாவுடன் தொடர்பு கொண்டிருந்ததோ அந்தளவுக்கு நபிவழியை பின்பற்றுவதில் உறுதி இருக்க வேண்டும்  

நபித்தோழர்களை மதிப்பதற்கு சரியான 
உவமையே இது  

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்

(அல்குர்ஆன் : 33:36)



    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           19-7-2025
             

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்