லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவு
லாஸ்ஏஞ்சல்ஸ் பேரழிவு
இறைவன் வழங்கிய தண்டனையா
***********************
கட்டுரை எண் 1507
************
உலகில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும்
இயற்கை சீற்றம் நிகழ்ந்தாலும் அவைகளை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு பிறரால் ஏற்பட்ட விபரீதங்களை தொடர்பு படுத்தி தங்களது ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் வெறுப்பையும் பல கோணங்களில் அறிக்கையாக போடுவதை பரவலாக காண முடிகிறது
சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயின் கொடூரத்தை விமர்சிக்கும் சில முஸ்லிம்கள் அமெரிக்காவின் ஆணவத்தாலும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளுக்காகவும் இறைவன் வழங்கிய தண்டனையை தற்போது அனுபவிக்கின்றனர்
என்று ஞானமின்றி முடிச்சு போட்டு அறிக்கையிடுவதை பரவலாக
காண முடிகின்றது
சமூகவலைத்தளத்தில் இவ்வாறு அறிவீனமாக அறிக்கை போடும் சிலரால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பிறர் துன்பத்தில் இனிமை காணும் சமூகமாக நடுநிலை மக்களால் பார்க்கப்படுகிறது இஸ்லாமிய எதிரிகளாலும் விமர்சிக்கப்படுகிறது
மனிதர்களை கொடுமைப்படுத்துவதே உங்கள் அல்லாஹ்வின் வேலை என்று ஏளனமாக நய்யாண்டியும் செய்யப்படுகிறது
இவைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம்
முஸ்லிம் சமூகத்தின் மார்க்க அறியாமையே
கடந்த காலத்தில் உலகளவில் ஏற்பட்ட நிலச்சரிவு மழைப்பெருக்கு போன்ற பேரழிவுகளில்
முஸ்லிம் சமுதாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்டதும்
முஸ்லிம் சமுதாயமே
எனவே அதை காரணம் காட்டி முஸ்லிம் சமுதாயம் செய்த கொடுமையால் தான் இவ்வாறு பேரழிவின் மூலம் பாதிக்கப்பட்டனர் என்று பிறர் விமர்சித்தால் அதை முஸ்லிம் சமூகம் ஜீரணிப்பார்களா ?
ஒரு பேரழிவு இறைவன் வழங்கும் தண்டனையின் மூலமாகத்தான் ஏற்பட்டது என்று உறுதியாக அடித்து சொல்வதாக இருந்தால்
அதை நபிமார்கள் வாழும் போது இறைச்செய்தியின் மூலமே எடுத்துச் சொல்ல முடியும்
தற்போது நபிமார்கள் உலகில் வாழ்கிறார்களா ?
அல்லது எந்த பேரழிவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் கொடூரமானவர்களும் இஸ்லாமிய விரோதிகளும் மனிதநேய விரோதிகளும் என்று இஸ்லாம் போதிக்கிறதா ?
இவ்வாறு சிந்தித்தால் கூட எந்த முஸ்லிமும் பேரழிவுகளுக்கு காரணங்களை கற்பிக்க மாட்டான்
சில மார்க்க அறிஞர்களும் உபதேசம் எனும் பெயரில் பொருத்தமற்ற ஆதாரங்களை முன் வைப்பதை காண முடிகிறது
எதன் மூலம் யார் பாதிக்கப்பட்டாலும்
அல்லது பொருளை இழந்தாலும்
அல்லது இருப்பிடத்தை இழந்தாலும்
அல்லது உயிரை இழந்தாலும் அவர்கள் மீது பரிதாபப்பட வேண்டியதும் பாதிக்கப்படும் மக்களின் நிம்மதிக்காக மனமுறுகி பிரார்த்தனை செய்வதுமே முஸ்லிமின் மரபாகும்
காலரா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்பட்டாலும் அவ்வாறு ஏற்படும் ஊரில் வசிக்கும் முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேறாது
அவ்வூரில் பாதிக்கப்படும் மக்களுக்காக களமிறங்கி உதவிட உழைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தை கற்றுத்தரும் மார்க்கமே இஸ்லாம்
இதை உணர்ந்து சமூகவலைத்தளத்தில் தவறான அறிக்கைகளை போடுவதில் இருந்து முஸ்லிம்கள் விலக வேண்டும்
பாதிக்கப்பட்ட மக்களின் உலக நலனுக்காக பிரார்த்தனை செய்ய வலியுருத்த வேண்டும்
ஏற்படும் பேரழிவுகள் சிலவேளை இறைவன் வழங்கும் தண்டனையாக இருப்பினும் அதை ஊர்ஜிதம் செய்ய முடியாத நிலை இருப்பினும்
அதை தண்டனை என்று தீர்மானிக்காது அதன் மூலம் பெற வேண்டிய படிப்பினைகளில் மட்டுமே முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்
பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் சிலவேளை தனது தவறான நடவடிக்கையின் காரணமாகவே இவ்வாறு இறைவன் தண்டித்துள்ளான் என்று நினைத்தால் அவ்வாறு அவர்கள் நினைப்பதை தவறு என்று கூற இயலாது
மாறாக அவர்களே தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டனர் என்று எடுத்துக்கொள்ளலாம்
ஆனால் பிறர்களுக்கு ஏற்படும் பேரழிவுகளுக்கு நாமாகவே காரணம் கற்பிக்க கூடாது
சில வேளை அது தவறாக இருப்பின் மறுமையில் குற்றவாளியாக மாறி விடுவோம்
நட்புடன் J .யாஸீன் இம்தாதி
12-1-2025
Comments
Post a Comment