நபிகளாரை புகழ்வோம்

           நபிகளாரை புகழ்வோம்
                 *******************
                  கட்டுரை எண் 1531
                       *************

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை 
நேசிக்காத எந்த முஸ்லிமும் 
உலகில் இல்லை 

நேசத்தின் அளவில் வேறுபாடு இருக்கலாமே தவிர 
அறவே நேசம் இல்லாத முஸ்லிம் என்று 
எவரையும் குறிப்பிட  முடியாது 

ஆனால் நபியை நேசிப்பது
என்றால் என்ன ?

அந்த நேசத்தை வெளிப்படுத்தும் முறைகள் என்ன என்பதில் முஸ்லிம் சமூகத்தில் 
சரியான புரிதல் இல்லை

சில மார்க்க அறிஞர்களே அறிவீனமாக மக்களை திசைதிருப்பும் அவலத்தை காண முடிகிறது


பெற்றெடுத்த பிள்ளைக்கு பெயர் சூட்டும் பொழுது முஹம்மத் என்று பெயரை வைத்தால் 
அது மட்டும் நேசத்தின் அடையாளமாகி விடுமா  ?


இதை தாண்டி  முஸ்லிம்களின் இதயத்தில் நபிகளாரின் நேசம் முழுமையாக பதியவில்லை 



சினிமா தியேட்டரை கட்டி எழுப்பி 
அந்த கட்டடத்திற்கு  முஹம்மத் என்று பெயர் சூட்டினால் அது நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாகிவிடுமா ?

எந்த நேசத்திற்கும் வரைமுறைகள் உண்டு

குறிப்பாக இறைத்தூதரை நேசிப்பதற்கும் 
நேசத்தை வெளிப்படுத்தவும் பல வரைமுறை இஸ்லாத்தில்  உள்ளது 

குர்ஆனும் சுன்னாவும் அந்த வரைமுறையை 
அழகாக விளக்கி சொல்கிறது 

அதை மீறி ஒரு மனிதன் 
நபிகளாரை துதித்தாலும் புகழ்பாடினாலும் விழாக்களை மேற்கொண்டாலும் அதற்கு பல நியாயங்களை கற்பித்து கொண்டாலும் 
அதுவும் நபிகளாரை இழிவுபடுத்தும் செயலே

வருடத்திற்கு ஒரு முறை சடங்காக புகழ்ந்து விட்டு கடந்து செல்வதற்கு நபிகள் நாயகம் (ஸல் )  அவர்கள் புகழுக்கு அடிமையான  
அரசியல்வாதியும் அல்ல


வரம்பு மீறி புகழும் போது 
ஆனந்தமாக புன்னகைத்து செல்லும் 
போலியான ஆன்மீககுருவும் அல்ல

முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் 
என்ற சொல்லை விட பெரிய புகழ் 
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை 

முஹம்மத் அல்லாஹ்வின் அடிமை என்று குறிப்பிடுவதை  விட நபிகளாரே விரும்பிய 
பெரும் புகழ் ஏதும் இல்லை 

அன்றாடம் பாங்கு சொல்லும் போது 
பாங்கு சொல்பவர் நபிகளாரை 
நபிகளார் சொன்ன விதத்தில்  புகழ்கிறார் 

பாங்கோசை கேட்கும் போது பாங்கிற்கு பதில் சொல்பவர் நபிகளாரை 
நபிகளார் சொன்ன விதம் புகழ்கிறார் 

பாங்கின் ஓசையை கேட்டு அதற்கு மதிப்பளித்து கடமையான தொழுகையை நிறைவேற்றுபவர் நபிகளாரை நபிகளார் சொன்ன விதம் புகழ்கிறார்

தொழுகையின் இருப்பில் சலவாத்தை படிப்பவர் நபிகளாரை  நபிகளாரை சொன்ன விதம் புகழ்கிறார்


நபிகளாரின் பெயர் கேள்வி படும் பட்சத்தில்  
நபிகளார் கற்றுத்தந்த சலவாத்தை முறையாக  படிப்பவர் நபிகளாரை 
நபிகளார் சொன்ன விதம் புகழ்கிறார் 

நபிகளாரின் போதனைகள் சொல்லப்படும் போது அதை செவியுற்று இயன்றவரை நடைமுறையில் கொண்டு வருபவர்  நபிகளாரை
 நபிகளார் சொன்ன விதம் புகழ்கிறார் 


இவைகளை தவிர்த்து விட்டு
நபிகளாரின் பெயரை பயன்படுத்தி மாற்றார்களை போல்  ஊர்வலம் செல்வது

என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையே தெரியாது அரபியில் எழுதப்பட்ட மவ்லிது  கவிதை புத்தகத்தை 
புனித நூல் போல் கற்பனையில் 
கருதி இறையில்லங்களில் படிப்பது 

இவையாவும் மார்க்கத்தை முறையாக கற்காதவர்களுக்கு மகிழ்வாகவும்
 நபிகளாரை புகழுவது போலும் தோன்றலாம் 

ஈமான் கொண்ட முஃமீன்களுக்கும்
குர்ஆன் சுன்னாவை படிப்போருக்கும் இவையாவும் வீண் என்பதும் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட பித்அத்துகள் என்பதும் ஆணித்தரமாக விளங்கும் 



  وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌  وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ

 (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் பற்றிப்பிடியுங்கள் 
அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்
 மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்துகொள்ளுங்கள்
 நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடினமானவன்

(அல்குர்ஆன் : 59:7)


       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          17-9-2024


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்