ஆசைகளுக்கு தாலி கட்டாதே

        ஆசைகளுக்கு தாலி கட்டாதே
        சிந்தனைக்கு வேலி கட்டாதே
             ••••••••••••••••••••••••••

அவசியமற்ற
ஆசைகளை வளர்த்தி
தேவையற்ற
தேடல்களை உருவாக்கி
நிம்மதியற்று  நிமிடங்களை
கடப்பதே 
உன் மனதுக்கு
நீயே செய்யும்
பச்சை துரோகம்

ஒன்றை நேசிக்கும் முன்
யோசிக்கும் கலையை கற்றுக்கொள்

சிறகிருந்தும்
நாடு முழுவதும் சுற்றித்திரிவதில்லை
பறவைகள்

வலிமையிருந்தும்
காடுகளை கடப்பதில்லை
மிருகங்கள்

புதுமைகளை தேடுவதே
உன் இனிமைகளை
முடமாக்கும் கருவிகள்

ஆசைகள் அருவிகளாய் தென்படும்
அருவிகள் ஏதும்
தனிமனிதனுக்கு உரிமையாகாது 

பசிக்கும் நேரம்
புசிக்கும் உணவை தருபவனே

இழக்கும் நேரம்
அரவணைக்கும் கரம் உரியவனே

உன் விழி காண
சுதந்திரமாய்
உன் முன்
சுற்றித்திரிபவனே

எவர் கண்ணுக்கும் புறம்பாய்
தெரியாத உறவிடமே

கோபித்தாலும்
சலித்தாலும்
சயனித்தாலும்
பயணித்தாலும்
அடித்தாலும்

உன்னுடன் உறவாய்
ஒட்டி நிற்கும் ஒருவனே
உனது உண்மையான உறவு

உனக்காக செலவழிப்பதை
கடமையாக எவன் கருதுகிறானோ
அவனே உண்மையான உறவு

ஆசைகளுக்கு தாலி கட்டாதே
சிந்தனைக்கு வேலி கட்டாதே

பெண்பால் நோக்கி
இக்கருத்து பயணித்தாலும்
ஆணுக்கும் இதே அளவுகோல்

காரணம்
தடுமாறும் மனம்
தடம் மாறும் மனம்
இரு பாலாருக்கும் உரியதே

மனம் என்பது
சேமிப்பு கிடங்கும் அல்ல
குப்பைத்தொட்டியும் அல்ல

    நட்புடன்   J . யாஸீன் இம்தாதி
                           26-6-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்