சலபுகளை பற்றிய சரியான பார்வை எது
சலபுகளைப்பற்றி
சரியான பார்வை எது
****************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
கட்டுரை எண் 1501
****************
அல்குர்ஆனின் போதனைகளும் நபிகளாரின் ஹதீஸ்களும் பல தரத்தில் அமைந்துள்ளது
சில போதனைகள் உன்னிப்பாக படிக்கும் எவருக்கும் எளிதாக புரியும் விதம் அமைந்திருக்கும்
சில போதனைகள் பாமரர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியாத விதத்தில் அமைந்திருக்கும்
சில போதனைகள் கல்விமான்களால் மட்டுமே தெளிவாக அறியும் விதம் அமைந்திருக்கும்
சில போதனைகள் பொதுஅறிவை பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும்
இவ்வாறு பல தரத்தில் அமைந்திருக்கும்
இஸ்லாமிய சட்டங்களை தெளிவாக அறிவதற்கும் ஆய்வு செய்வதற்கும் குறுகிய வட்டத்தை இஸ்லாம் திணிக்கவில்லை
ஒரு சாரார் புரிந்து கொண்ட விதத்தில் மாத்திரமே இஸ்லாத்தை பிறர் புரிய வேண்டும்
ஒரு சாரார் கொடுத்துள்ள விளக்கத்தை மட்டுமே சிந்தனையை ஒதுக்கி விட்டு பிறர் ஏற்க வேண்டும்
ஒரு சாரார் கொடுத்துள்ள விளக்கத்திற்கு மாற்றமாக சிந்திக்கவே கூடாது என்று இஸ்லாமிய மார்க்கம் வரைமுறைகளையும் திணிக்கவில்லை
சுய சிந்தனைக்கு மதிப்பளிக்கிறோம் எனும் பெயரில் சலபுகளின் கருத்துக்களை கண்டு கொள்ளாது புறக்கணிப்பதும் தவறு
சலபுகளை மதிக்கிறோம்
எனும் பெயரில் சுயசிந்தனையை பயன்படுத்தாது அடகு வைப்பதும் தவறு
ஆய்வு செய்ய மாட்டீர்களா ?
சிந்திக்க மாட்டீர்களா ?
என்ற கருத்தில் வரும் அல்குர்ஆன் வசனங்கள் யாவும் கடந்த காலத்தில் முற்று பெற்ற வசனங்கள் அல்ல
மாறாக கியாமத் நாள் வரை
மனித சமூகத்தின் சிந்தனைகளுக்கு
உரம் தூவும் திருமறை வசனங்களே
கியாமத் நாள் வரை ஒரு கூட்டம் சத்தியத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள் என்ற நபிமொழியின் போதனைகள் சத்தியத்தை தேடுவதற்கு முயற்சிப்பதை பேசுகிறதே தவிர
அவர்கள் இவர்களே என்று முத்திரை குத்தி சுயசிந்தனையை அந்த சாரார் மீதே
அடகு வைப்பதற்கு சொன்னது அல்ல
மார்க்கத்தின் பெயரால் ஒரு கருத்தை
எவர் சொன்னாலும் அக்கருத்து குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்டதாக இருக்கிறதா ?
அந்த கருத்தை உள்வாங்குவதற்கு
அவர் எடுத்து வைக்கும் சான்றுகள் பொருத்தமானதாக இருக்கிறதா ? என்று சுயசிந்தனையை பயன்படுத்தி எடை போட வேண்டுமே தவிர
இதுவரை எவரும் சொல்லாத கருத்தை ஒருவர் சொன்னதால் அவரது கருத்தை ஆய்வின்றி வழிகேடு என்று முத்திரை குத்துவதற்கு முற்படக்கூடாது
தன்னிடம் ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்குவதற்கு மார்க்கத்தை முழுமையாக அறியாத நபர்கள்
ஒரு கேள்வியை எழுப்பினால்
அது தொடர்பாக இடம் பெற்றுள்ள மாறுபட்ட கருத்துக்களை எடுத்துச்சொல்லி அந்த கருத்துக்களில் எது சரி என்று தெளிவு படுத்த வேண்டுமே தவிர
அல்லது மாறுபட்ட கருத்துக்களில்
எது சரி என்று தீர்மானம் செய்ய எனக்கு இயலவில்லை என்று தனது ஆய்வின் பலவீனத்தை மார்க்க அறிஞர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர
சந்தேகம் கேட்ட நபரிடம்
இரு கருத்தும் நிலவுகிறது என்று மாத்திரம் குறிப்பிட்டுவிட்டு சந்தேக கேள்வியை கேட்டவருக்கு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதம்
மார்க்க பத்வாக்களை வழங்க கூடாது
அதற்குப்பெயர் பத்வாவும் அல்ல
இதுவரை இக்கருத்தை யாராவது சொல்லியுள்ளார்களா ? என்ற எதிர் கேள்வியே அனாவசியமானது
காரணம் விஞ்ஞான கருத்துக்களாக தற்காலத்தில் குர்ஆனுடன் ஒப்பிட்டு பேசும் எக்கருத்தும் கடந்த காலத்தில் சலபுகள் துல்லியமாக கூறாதவைகளே
நவீன கால விவகாரங்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தீர்ப்புகள் யாவும் கடந்த காலத்தில் வாழ்ந்த சலபுகள் கூறாதைவைகளே
குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் சலபுகள் தரும் ஒரு நிலை கருத்தை ஏற்பது அவசியமானது
ஆனால் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் சலபுகள் தரும் இரு நிலை கருத்தில் எது சரியானது என்பதை ஒப்பீடு செய்து முடிவு செய்வதே மார்க்கம் கற்றுத்தரும் வழிமுறையாகும்
அவ்வாறு தான் நடைமுறையிலும் உள்ளது
மஹ்ரு விசயத்தில் முத்தலாக் விசயத்தில் உமர் ( ரலி ) அவர்களின் கூற்றை அவ்வகையில் தான் எடைபோட்டுள்ளோம்
சலபுகளும் அவ்வாறு தான் நடைமுறையில் எடை போட்டுள்ளனர்
இன்னும் இது போல் பல சான்றுகளை வரலாறுகளிலும் தற்கால நடவடிக்கைகளிலும் பரவலாக காணலாம்
சில விசயங்களில் இரு கருத்தும் ஏற்கத்தகுந்தவையாக இருக்கும்
சில விசயங்களில் இரு கருத்தும் ஏற்கத்தகாதவையாக இருக்கும்
சில விசயங்களில் இரு கருத்தில் ஒன்று மட்டுமே சரியாக இருக்கும்
சில விசயங்களில் ஒரு கருத்து மட்டுமே சிறப்பாக இருக்கும்
இதில் எவ்வகை கருத்தாக இருந்தாலும் குர்ஆன் சுன்னாவை முன் வைத்து எடுக்கப்படும் தீர்மானமே இறுதி முடிவாக அமைய வேண்டும்
மதித்தல் என்பது வேறு
பின்பற்றுதல் என்பது வேறு
மார்க்க விவகாரங்களில் இறைவனின் சொல்லுக்கும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே மாற்றுக்கருத்துக்கு அறவே இடம் இல்லை
இறைவனின் கூற்றிலும் இறைத்தூதரின் கூற்றிலும் சுய ஆய்வுக்கும் இடம் இல்லை
அறிவுக்கும் இடம் இல்லை
அறிவியலுக்கும் இடம் இல்லை
இப்பதிவு சலபுகளை மறுக்கும் பதிவும் அல்ல சலபுகளை தாண்டி எவரும் சிந்தனையை பயன்படுத்தக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தும் பதிவும் அல்ல
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ
தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள்
அவர் எதை தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்துகொள்ளுங்கள்
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடினமானவன்
(அல்குர்ஆன் : 59:7)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment