அவ்லியா தொடர் ஆறு

  மகான்களை மட்டப்படுத்தும்
               ஞானசூனியங்கள் 
           *****************************
    பாகம் ஆறு .  கட்டுரை எண் 1546
                    *****************
இறைத்தூதர் (ஸல்)  அவர்கள் காட்டிய வழியை முழு மனதுடன் வாழ்வில் யார் இயன்றவரை நடைமுறை படுத்துகிறார்களே 
அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் மகான்கள் என்பதை பாமரன் புரிந்து கொள்ளும் விதம் அல்லாஹ் (ஜல்) குர்ஆனில் குறிப்பிடுகிறான் 

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

(நபியே!) நீர் கூறும்
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்
அல்லாஹ் உங்களை நேசிப்பான்
உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 3:31)



இறைத்தூதரின் வழியை தூதரின் குடும்பத்தவர்கள் மட்டுமே முழுமையாக  பின்பற்றுவார்கள் என்றில்லை 
இஸ்லாத்தை தழுவிய எவரும் பின்பற்றலாம் பின்பற்ற இயலும் 
தூதர்களின் குடும்பத்தவர்களும் கூட இறைத்தூதரின் போதனைகளை புறக்கணித்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு பல நபிமார்களின் வரலாறும் சான்றாக உள்ளது 

இந்நிலையில் தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள எவரைப்பற்றி கேட்டாலும் அவர்கள் அனைவரும் இறைத்தூதரின் வம்சாவழியில் வந்தவர்கள் என்றே  பகிரங்கமாக சில ஆலீம்களால்  பேசப்பட்டும் தர்ஹாக்களில் எழுதப்பட்டும் உள்ளது 

இதன் பின்னனி என்ன ?

நபியவர்களின் காலத்திற்கு பிறகு இறைத்தூதர் குடும்பத்தவர்கள் அல்லாத  எவரும் நல்லடியாராக உலகில் வாழவில்லையா  ?

இறைத்தூதரின் குடும்பத்தில் வந்தவர்களை மட்டுமே மகானாக கண்டறிய முடியும் மற்றவர்களை மகானாக கண்டறிய முடியாது என்று குர்ஆன் சுன்னா போதிக்கிறதா   ?

அலி ( ரலி) அவர்களின் குடும்பத்தார்கள் மட்டுமே மகானாக மாற முடியும் என்ற ஷியாக்களின் போலி  சிந்தாத்தத்திற்கும் தர்ஹாக்களை ஊக்கப்படுத்தும்  சுன்னத்ஜமாத்திற்கும் 
என்ன வேறுபாடு உள்ளது  ?

நபி ஆதம் (அலை) அவர்களின் குடும்பமாக இருந்தும் அவரின் மகன்களின் ஒருவரை நரகவாதி என்று குர்ஆன் குறிப்பிடுவதை தர்ஹாவாதிகள் தவறு என்று குறிப்பிட விரும்புகிறார்களா  ?

நபி நூஹ் (அலை) அவர்களின் குடும்பமாக இருந்தும் அவருடைய மகனையும் மனைவியையும் நரகவாதி என்று குர்ஆன் குறிப்பிடுவதை தர்ஹாவாதிகள் தவறு என்று குறிப்பிட விரும்புகிறார்களா  ?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பமாக இருந்தும் அவருடைய தந்தையை நரகவாதி என்று குர்ஆன் குறிப்பிடுவதை தர்ஹாவாதிகள் தவறு என்று குறிப்பிட விரும்புகிறார்களா  ?

நபி லூத் (அலை) அவர்களின் குடும்பமாக இருந்தும் அவருடைய மனைவியை நரகவாதி என்று குர்ஆன் குறிப்பிடுவதை தவறு என்று குறிப்பிட விரும்புகிறார்களா?

நபிகள் நாயகத்தின் குடும்பமாக இருந்தும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த அபூலஹப் அபூஜஹ்ல்  போன்றோரை நரகவாதி என்று குர்ஆன் குறிப்பிடுவதை தவறு என்று குறிப்பிட விரும்புகிறார்களா ?

ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌  كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏

நிராகரிப்பவர்களுக்கு நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான் இவ்விருவரும் ஸாலிஹான 
நம் நல்லடியார்களில்
இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர் எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர் எனவே, அவ்விருவரும் 
(தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை
இன்னும், “நீங்களிருவரும் 
(நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள் என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.l

(அல்குர்ஆன் : 66:10)


இது போல் அடுக்கடுக்கான 
எதிர் கேள்விகளை எடுத்து வைத்தாலும் 
அதற்கு நியாயமான பதில் கூற கடமைப்பட்ட தர்ஹாவாதிகள் 
இவர்கள் வலிமார்களை மதிக்காத கூட்டம்  வலிமார்களை கேலி செய்யும் கூட்டம் அவ்லியாக்களை அவமதிக்கும் கூட்டம்  என்று வழமை போல் இணைவைப்பை கண்டிக்கும் அழைப்பாளர்களை பற்றி  மக்கள் மனதில் நஞ்சை திணித்து நகர்ந்து விடுவார்கள் 

பாகம் ஏழு இன்ஷா அல்லாஹ் தொடரும்   !!!!!

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                         21-12-2025



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்