மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள்
மகான்களை மட்டப்படுத்தும்
ஞானசூனியங்கள்
*****************************
கட்டுரை எண் 1540
*****************
தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகான்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைக்கவே தங்கள் ஊருக்கு வந்தார்கள் என்றே
ஒவ்வொரு மகான்களைப்பற்றியும் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது
ஆனால் தர்ஹாக்களில் நடைபெற்று வரும் சடங்குகளை வழிபாடுகளை பித்தலாட்டங்களை கண்டால் மகான்கள் பெயரில் சொல்லப்படும் கதைகள் யாவும் அவர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்டவை என்றே கருத தோன்றுகிறது
காரணம் தர்ஹாக்களுக்கு செல்லும் எவரும் மகான்களின் மறுமை நன்மைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது இல்லை
மாறாக மகான்களிடமே நேரடியாக கையேந்தி சஜ்தா எனும் சாஷ்டாங்கம் செய்து அவர்களையும் குட்டி தெய்வங்களாகவே மாற்றி விட்டனர்
பேய் பிசாசு ஓட்டுவதாக மக்களை ஏமாற்றுவது மயில் தோகை மூலம் ஆசி வழங்குதல் தீபம் ஏற்றுதல் குத்துவிளக்கு ஏற்றுதல் காணிக்கை செலுத்துதல் நேர்ச்சை செய்தல் மகான்களின் பெயரில் மொட்டை அடிக்குதல்
தீ மிதித்தல் போன்ற இந்து சமூக மக்களின் நம்பிக்கைகளை அச்சு பிசகாது பிரதிபலிக்கும் இடமாகவே தர்ஹாக்கள் மாற்றப்பட்டு விட்டது
ஆண்டு விழா எனும் பெயரில் சந்தனக்கூடு இழுத்தல் கரகாட்டம் குத்தாட்டம் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி கோயில் திருவிழா போன்று அனாச்சாரங்களை அரங்கேற்றும் இடமாகவே தர்ஹாக்களை முழு வடிவில் மாற்றி விட்டனர்
இது போன்ற வழிகேடுகளை நடைமுறைபடுத்துமாறு எந்த மகான் வாழ்நாளில் மக்களுக்கு பிரச்சாரம் செய்தார் ?
ஷியாக்களின் வழிகெட்ட கொள்கையை அச்சு பிசகாது நடைமுறை படுத்திக்கொண்டே தங்களை சுன்னத்ஜமாத் என்று தம்பட்டம் அடிப்பது மக்களை முட்டாளாக்கும் செயலாகும்
இறந்தவர்களுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டி இவர்கள் மகான்கள் இவர்கள் சாதாரண மக்கள் என்று வேறுபாடு காட்டும் விதமாக மண்ணறைகளின் மீது கட்டடம் எழுப்புவதை இஸ்லாம் கடுகளவும் ஏற்றுக் கொள்ளவில்லை
இவைகளை வன்மையாக கண்டித்து எச்சரிக்கை செய்த நபிமொழிகளே ஏராளம் உள்ளது
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் போதித்த ஏகத்துவ சிந்தனையை குழி தோண்டி புதைத்து விட்டு இஸ்லாத்தையும் ஏனைய மதத்தை போன்று மாற்றியமைத்து முஸ்லிம் சமூகத்தை நரகப்படுகுழியில் தள்ளும் மார்க்க மூடர்களை இனம் காணுவது முஸ்லிம் சமூகத்தின் கட்டாய கடமைகளில் முதன்மையாகும்
தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம்
தூய வழி காட்டச்சொல்லி கேட்டு வருவோம்
என்ற பாடலை மாற்றியமைத்து
தூய வழியை போதித்து மகான்களின் கண்ணியத்தை காத்து வருவோம்
என்று பாடுவதே பொருத்தமானது
قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
(நபியே!) நீர் கூறும்
மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான்
அது மிக்க உறுதியான மார்க்கமாகும்
இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும்
அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை
(அல்குர்ஆன் : 6:161)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
8-12-2025
Comments
Post a Comment