ஜகாத் சட்டங்கள்

         ஜகாத்தின் சட்டங்களும்
                     அவசியமும்

|<^><^><^><^><^><^><^><^><^><^><^>|
        26-05 -2017 கட்டுரை எண் 1090
                  -----------------------------
              J. யாஸீன் இம்தாதி
                      !+++++++++!
         Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!

இஸ்லாத்தில் ஜகாத் எனும் பொருளியல் சட்டம் மிகவும் விரிவானது அவைகளை நேரடி ஹதீஸ்களை போட்டு புத்தகமாக வெளியிடலாமே தவிர சுருக்கமான கட்டுரையாக வெளியிடுவது சாத்தியமற்றது

நாம் கட்டுரை வடிவமாக இதை வெளியிடுவதால் பல ஹதீஸ் மற்றும் ஆய்வு நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்திகளின் சாரத்தை மட்டும் நம் தோரணையில் இயன்ற வரை மிகவும் சுருக்கமாகவும் அதே நேரம் எனது அறிவுக்கு உட்பட்டு மிகவும் எளிமையாகவும் இக்கட்டுரையை வடித்துள்ளேன்


இதில் எழுதப்பட்டுள்ள ஹதீசின் சாரத்திற்க்கு நேரடி ஆதாரம் தேவைப்படுவோர் என் தொடர்பு எண் அணுகினால் அதற்கான விளக்கத்தையும் ஆதாரத்தையும் இன்ஷா அல்லாஹ் தருவேன் என்று உறுதி மொழியளிக்கின்றேன்

       இப்படிக்கு J. யாஸீன் இம்தாதி
                   9994533265
   ||===========================||
              ஜகாத்தின் அவசியம்
                   -------------------------

இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் நான்காவது கடமையாக இருப்பது ஜகாத் என்ற கடமையாகும்

தான தர்மங்களும் ரமலானுக்கு கொடுக்கப்படும் ஜகாதுல் பித்ரு எனும் தர்மமும் இறை நம்பிக்கை உள்ள ஒரு மனிதனுக்கு அதிகப்படியான நன்மைகளை பெற்றுத்தரும் அமல்களே தவிர அவைகளை கொடுக்காத காரணத்தால் மறுமையில் இறைவனிடம் கேள்விகளோ அல்லது தண்டனைகளோ இல்லை

அதே நேரம் கடமையாக்கப்பட்ட ஜகாத் எனும் கடமையை உலகில் சரியாக நிறைவேற்றாத போது அதற்க்கு கடுமையான தண்டனைகளை மறுமையில் அடைந்தே தீர வேண்டும் என்பதே முஸ்லிம்கள் புரிந்து கொள்ள கடமைபட்டுள்ளனர்

சுருக்கமாக சொன்னால் ஜகாத் எனும் கடமையை நிறைவேற்றும் ஒரு மனிதன் தான தர்மங்களை வழங்காது போனால் அது மறுமையில் தண்டனைக்குரிய ஒன்று அல்ல


அதே நேரம் தனது வாழ்நாளில் கோடிகளை தான தர்மம் செய்யும் ஒரு மனிதன் அவன் மீது விதியாக்கப்பட்ட ஜகாத் எனும் கடமையில் நூறு ரூபாயை கொடுக்காது போனாலும் அந்த நூறு ரூபாயை ஜகாத் கொடுக்காமல் இருந்த காரணத்தால் மறுமையில் கேள்விகளும் உண்டு அதற்காக கடுமையான தண்டனைகளும் உண்டு என்பதை முதலில் நினைவில் வைக்க வேண்டும்

وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.

        (அல்குர்ஆன் : 9:34)


يَّومَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْن َ‏

 (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது

ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்)

               (அல்குர்ஆன் : 9:35)

===============================
      எப்போது ஜகாத்தை கொடுக்க
                          வேண்டும் ?
                       -----------------

பொதுவாக ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடையோர் அந்த ஜகாத் தொகையை ரமலான் மாதத்தில் கொடுப்பது தான் சிறந்த முறை என்று புரிந்து வைத்துள்ளனர் ஆனால் இது தவறான புரிதலாகும்

உங்கள் கையில் இருக்கும் அதிகப்படியான சேமிப்பு பொருள் சரியாக பிறை கணக்கு பிரகாரம் ஒரு வருடம் இருந்தால் அந்த வருடம் பூர்த்தியாகும் மாதத்தில் அதற்கான ஜகாத் தொகையை கொடுப்பது தான் சரியான முறையாகும்

அதாவது ரமலானுக்கு முன் வரும் ஷஃபான் மாதம் 2017 ம் வருடம் 15 ம் பிறையில் உங்கள் கைவசம் சேமிப்பில் இருக்கும் ஒரு பொருள் அடுத்த 2018 ம் வருடம் ஷஃபான் மாதம் பிறை 15 வரை இருந்தால் அந்த பொருளுக்கான ஜகாத் தொகையை அதே ஷஃபான் மாதம் பிறை 16 அன்று ஜகாத் வாங்க தகுதி பெற்றோரிடம் ஒப்படைத்து விட வேண்டும் அதை தாண்டி அந்த ஜகாத் தொகையை தனது கைவசமே வைத்திருந்து அந்த ஜகாத் தொகையை  ரமலான் மாதம் வரை பிற்படுத்தினால் ஏழைகளுக்கு சேர வேண்டிய ஜகாத் தொகையை இடைபட்ட நாட்களில் தன்வசம் வைத்திருந்து ஏழைகளின் உரிமை பொருளை தடுத்து வைத்துள்ளனர் என்பதே இஸ்லாமிய பார்வை ஆகும்

       ++++++++++++++++++++++++
       ! யாரின் மீது  ஜகாத் கடமை !

                      ---------------

பணக்காரர்கள் மீதும் பல சொத்துக்களுக்கு உரிமை பட்டவர்கள் மீதும் கோடீஸ்வரர்கள் மீதும் தான் ஜகாத் கடமை என்ற ஒரு தவறான புரிதல் முஸ்லிம் சமூகத்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது இதனால் தான் ஓரளவு வசதி பெற்ற முஸ்லிம்கள் கூட அவர்கள் நினைத்த நேரத்தில் மட்டும் செய்வதை பார்க்க முடிகின்றது

ஒரு மனிதன் தனது அத்தியாவசிய தேவைகள் போக ஒரு வருடம் முழுவதும் சேமிப்பில் மீதமிருக்கும் இருப்பு தொகைக்கும் வருமானத்தை பெற்றுத்தரும் அனைத்து விதமான வணிகத்திற்க்கும் கணக்கு பார்த்து ஜகாத் கொடுப்பதே ஜகாத்தின் அடிப்படை சட்டமாகும்

இது கோடீஸ்வரர்களுக்கும் லட்சாதிபதிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் சிறு சேமிப்பில் தேவைகள் போக தொகை சேமிக்கும் அனைவருக்குமே பொருந்தும் என்பதை அனைவரும் அறிய கடமைபட்டுள்ளோம்

அதே நேரம் ஒரு மனிதன் தனது குடும்ப தேவைக்கு பயன்படுத்தும்

(1) இல்லம் ( 2 ) வாகனம்   ( 3 ) தனது குடும்ப வருமானத்திற்க்கு பயன்படுத்தும் ஒரு வணிக இடம் அல்லது கட்டிடம் ஆகியவை ஜகாத் எனும் கட்டளையில் அடங்காது

      ++++++++++++++++++++++++

                    ஜகாத் வழங்க
          கடமைபட்டவர்களிடம்
இருக்க வேண்டிய நிதியின் அளவு
               ++++++++++++++++

1. ஜகாத்து நிதி தங்கமாக இருந்தால், 85 கிராம் அளவு தங்கத்தை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருந்து அதற்க்கு மேல் இருந்தால் இந்த 85 கிராம் தங்க நகைகளுக்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டும்

2. வெள்ளியாக இருந்தால் 595 கிராம் அளவு வெள்ளியை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்கும் பட்சத்தில் 595 கிராமுக்கும் சேர்த்து அதிகப்படியாக இருக்கும் வெள்ளிக்கும் ஜகாத் வழங்க வேண்டும்

3. ரூபாய் நோட்டுகளாக இருந்தால் தனது அன்றாட செலவுகள் இதர தேவைகள் போக மீதமுள்ள தொகை சேமிப்பில் இருக்கும் பட்சத்தில் 85 கிராம் தங்கத்தின் அன்றைய மார்க்கட் விலை என்ன? என்ற விபரத்தைத் தெரிந்து, அதன் அடிப்படையில் சேமிப்பில் இருக்கும் 85 கிராம் தங்கத்தின் மதிப்பின் அளவுக்கு மேல் சேமிப்பு தொகை இருந்தால் சேமிப்பு முழுமைக்கும் இரண்டரை சதவிகிதத்தை கணக்கு பார்த்து ஜகாத்தாக வழங்க வேண்டும்

பணம் -- ஒரு வருட இலாப இருப்பு 5000 என்றால் அதன் ஜகாத் தொகை 125 ரூபாய் மட்டுமே

4 -விவசாயத்தின் மூலம் வரும் விளைச்சலாக இருந்தால் அவைகள் அறுவடை செய்யும் போது ஜகாத் கடமையாகிறது வருடத்திற்க்கு இரு முறை அல்லது மூன்று அறுவடை நடை பெற்றால் அந்த அறுவடை முறையை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர ஒரே வருடம் செய்யப்படும் ஒரு அறுவடைக்கு ஜகாத்தை கொடுத்து விட்டு அதே வருடம் செய்யப்படும் மறு அறுவடைக்கு ஜகாத்தை கொடுக்காமல் இருத்தல் கூடாது அந்த அடிப்படையில் மழை நீர் போன்ற சுய முயற்சி இல்லாமல் ( மானாவாரி மூலம்) நீர் பெற்று விளையும் உணவுப் பொருள்களில் 400 கிலோவிற்க்கு மேல் விளைச்சல் பொருள்கள் இருந்தால் அதில் பத்து சதவிகிதமும் சுயமாக செலவுகளை செய்து நீர் பாய்ச்சப்பட்டு விளையும் விளைச்சல்களுக்கு ஐந்து சதவிகிதமும் ஜகாத் கொடுப்பது கடமையாகும்

இது அல்லாது சேமிக்கப்படும் பணம் ஹலாலான எந்த தொழில் மூலம் இருந்தாலும் அவை துல்லியமாக கணக்கு போட முடியாத பட்சத்தில் அவைகளை நாம் மேற்கூறிய அடிப்படையில் முடிந்தளவு கணக்கீடு செய்து கொடுத்தால் போதுமானது

5 - பிறர்களுக்கு கடன் கொடுத்த தொகை கைவசம் வராத சூழலிலும் தன்னிடம் இருக்கும் பொருள் அடமானமாகவோ அல்லது அமானிதமாகவோ ஒப்படைக்கப்பட்டு இருக்கும் சூழலிலும் அவைகளுக்கு கணக்கு பார்த்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை காரணம் நம் கை மாறி பிறர்களிடம் இருக்கும் நமது பொருள் நம் கைவசம் வந்து தீரும் என்ற உத்திரவாதம் இல்லை

அதே நேரம் ஜகாத் என்ற கடமையில் இருந்து தப்பிப்பதற்க்கு கடனாகவோ அமானிதமாகவோ பிறர்களுக்கு கொடுத்து தந்திரம் செய்வது பாவமான காரியம் காரணம் இறைவன் ஏமாறுபவன் அல்ல

6. ஜகாத் நிதி ஆடு, மாடு, போன்ற கால்நடையாக இருக்கும் போது, அவற்றிலிருந்து ஜகாத் வழங்குவதும் அவசியம்

அதாவது 40-க்கு குறையாத வளர்ச்சி பெற்ற ஆடுகள் 40 முதல் 120 ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத்தாக கொடுக்க வேண்டும்

121 முதல் 200 வரை 2  ஜகாத்தாக கொடுக்க வேண்டும் 30-க்கு குறையாத வளர்ச்சி பெற்ற மாடுகள் இருந்தால் ஒரு மாடு ஜகாத் கொடுக்க வேண்டும் 40-க்கு குறைவான ஆடுகளைப் பெற்றிருப்பவர்களும், 30-க்கு குறைவான மாடுகளை வைத்திருப்பவர்களும் ஜகாத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை           
       +++++++++++++++++++++

    ஜகாத் பெற தகுதியுடையோர்
                           யார் ?
             __________________

தான தர்மமாக இருந்தாலும் சரி கடமையான ஜகாத்தாக தொகையாக இருந்தாலும் சரி அவைகளை தன் குடும்பத்தை சார்ந்த ஏழைகளுக்கு கொடுப்பது தான் மார்க்கத்தில் சிறப்பானது அதே நேரம் ஜகாத் எனும் தொகையை எட்டு நபர்களுக்கு மட்டுமே கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்

1-கேட்டு வரும் ஏழை
2 - கேட்க கூச்சப்படும் ஏழை
3 - ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்
4 - இஸ்லாத்தின் பக்கம் தனது சிந்தனையை செலுத்தி கொண்டுள்ள இஸ்லாத்தை தழுவாத மாற்று மத சகோதரர்கள்
5 -
அடிமைகளின் விடுதலை ( தற்காலத்தில் மனிதர்களை அடிமையாக வைத்திருக்கும் சூழல் இல்லை )
6- கடனாளிகள்
7- யுத்த களம்
8 - வழியில் பொருளை தவற விட்டு தவிக்கும் பயணிகள்

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآء
ِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْم ٌ‏ 

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் அல்லாஹ் (யாவும்) அறிபவன் மிக்க ஞானமுடையோன்

           (அல்குர்ஆன் : 9:60)
  ++++++++++++++++++++++++++

ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது வருடா வருடம் கொடுக்க வேண்டுமா என்ற சர்ச்சை தற்போது சிலர்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது ஜகாத்தை கொடுப்போரை விட இது கூடுமா கூடாதா என்று இரு தரப்பு சர்ச்சை செய்வோர் தான் இன்று மிக அதிகம் பெருகி விட்டனர்

இந்த சர்ச்சையில் தற்போது நாம் தலையிட விரும்பவில்லை கடந்த வருடம் ஜகாத் கொடுக்கப்பட்ட தொகையை மூலதனமாக வைத்து வேறு வகையில் இலாபம் ஈட்டினால் கடந்த வருடம் ஜகாத் கொடுக்கப்பட்ட மூல தனத்திற்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதே பல மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை நான் சுயமாக ஒப்பீடு செய்து பார்த்து கண்டறிந்த எனது மார்க்க நிலைபாடாகும்

அதே போல் 5 இலட்சம் மதிப்புள்ள ஒரு மனிதனின் அதிகப்படியான சொத்தாக இருக்கும் காலிமனைக்கு ஓரு முறை ஜகாத் கொடுத்த பின் அடுத்த வருடம் 7 இலட்சம் என்று விலை ஏற்றம் அடைந்தால் மீண்டும் அதற்க்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதும் சரியான ஆய்வாக அமைந்துள்ளது

காரணம் 2 இலட்சம் விலை ஏற்றத்தின் மூலதனமே அந்த 5 இலட்ச மதிப்புள்ள காலிமனை என்பதை சிந்திக்க மறுப்பது அறியாமையாகும்

                  நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்